காய்ச்சல் அதிகரிப்பு: புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை பள்ளிகளை மூட பரிந்துரை

புதுவையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பினை தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Update: 2022-09-16 14:57 GMT

புதுவை,

புதுவையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் அதிகரித்துள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் பாதியளவு குழந்தைகள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் வாயிலாக பிற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காய்ச்சல் பரவி வருகிறது.தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் அவர்கள் காய்ச்சலுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மழைக்காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்தான் என்றும், இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்தநிலையில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மூட சுகாதாரத்துறை கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கல்வித்றை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 தினங்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கபட்ட குழந்தைகள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் அதிக அளவில் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பெரும்பாலானவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் காய்ச்சலானது குழந்தைகள் மூலம் அதிக அளவில் பரவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இது அதிகமாக உள்ளது.

அவர்களை வீடுகளில் தங்க வைத்து கைகளை சுத்தம் செய்வது, முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிக்க செய்வதன் மூலம் இதனை குறைக்கலாம். எனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்தபட்ச காலமாவது பள்ளிகளை மூட முடிவெடுக்கவேண்டும். இந்த நடவடிக்கை வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்