ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா: உடலில் வைக்கோலை சுற்றிக்கட்டி நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்
மேலூர் அருகே உள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோலை சுற்றிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்;
மேலூர்,
மேலூர் அருகே உள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோலை சுற்றிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏழை காத்த அம்மன் கோவில்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது. வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 60 கிராமங்கள் வெள்ளலூர் நாடு என பல நூற்றாண்டுகளாக அழைக்கப்படுகிறது.
வெள்ளலூர்நாட்டு மக்கள் வல்லடிகாரர் சுவாமி, ஏழைகாத்த அம்மன், கருங்கல் மந்தைச்சாமியை காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவில் வீடு முன்பு ஒன்று கூடி 7 சிறுமிகள் அம்மன் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 15 நாள் திருவிழா தொடங்கியது. இந்த நாட்களில் 60 கிராம மக்களும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதம் இருந்து வந்தனர்.
வைக்கோல் சுற்றி ஆண்கள் நேர்த்திக்கடன்
விழாவின் 14-வது நாளான நேற்று வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவில் வீட்டில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கோவில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோவிலுக்கு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் 7 சிறுமிகளும் அம்மன் தெய்வங்களாக அலங்கரித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி ஊர்வலத்தில் வந்தனர்.
அதனை தொடர்ந்து மண்ணால் செய்யப்பட்ட பெரிய சேமகுதிரை வாகனமும், மதுக்களையும்(மண் பொம்மைகள்) பக்தர்கள் சுமந்து வந்தனர். பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன்களை செலுத்தி மக்கள் வழிபட்டனர். ஆண் பக்தர்கள் உடலில் வைக்கோலை கயிறுபோல திரித்து சுற்றிக்கொண்டும், முகமூடிகளை அணிந்தும் வந்தனர். பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மதுக்களை (மண் பொம்மைகளை) சுமந்துவந்தனர்.
திருமணமான பெண் பக்தர்கள் மண்கலயங்களை அலங்கரித்து சுமந்து வந்தனர். வெள்ளலூரில் தொடங்கி கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி விலக்கு வழியாக கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவிலுக்கு நடந்து சென்று வழிபட்டனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.