ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக கார் வழங்கப்படும்

பாலமேட்டில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக கார் வழங்கப்படும் என விழா கமிட்டி கூறியது.

Update: 2023-01-14 18:45 GMT

 அலங்காநல்லூர்,

பாலமேட்டில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக கார் வழங்கப்படும் என விழா கமிட்டி கூறியது.

பாலமேடு ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா நாளை(திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:- வழக்கத்தை போ லவே இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு சிறப்பாக அரசு வழிகாட்டுதலுடன் நடைபெறும். சிறந்த காளைக்கு முதல் பரிசாக முதல்-அமைச்சர் வழங்கும் ஒரு கார் மற்றும் இரண்டாம் பரிசாக கன்று குட்டியுடன் நாட்டு பசுமாடு வழங்க உள்ளோம்.

முதல் பரிசு கார்

சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்க உள்ளோம். மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டில் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் டோக்கன் வழங்கப்படும்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நம்பர் படியே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும். இந்த வருடம் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும். பாலமேடு பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு விழாவின் மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு பார்வையாளர் அமரும் கேலரி கூடுதலாக அமைத்துள்ளோம். தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே குடி தண்ணீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்