பவானிசாகர் அருகே வனப்பகுதி கோவிலில் திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பவானிசாகர் அருகே வனப்பகுதி கோவிலில் நடந்த திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினார்கள்.

Update: 2023-02-18 21:36 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அருகே வனப்பகுதி கோவிலில் நடந்த திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மகாசிவராத்திரி

பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் குரும்பகவுண்டர் இனத்தின் குலதெய்வமான தொட்டம்மா, சின்னம்மா என்று அழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று மகாசிவராத்திரியன்று கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்தனர்.

தலையில் தேங்காய் உடைப்பு

இதையொட்டி மாலை 5 மணிக்கு மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி கோவில்களில் சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு் பூஜை நடந்தது. பின்னர் தாரை தப்பட்டை முழங்க 3 கோவில்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தர்கள் எடுத்து கோவிலுக்கு வெளியே வந்து தங்கள் தலையில் தாங்களே உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கண்டு களித்தனர்.

இதுகுறித்து அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, 'தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது. அதே சமயம் தவறு செய்தவர்கள் தேங்காய் உடைத்தால் தலையில் வலி ஏற்படும். ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைத்து குலதெய்வத்தை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் மற்றும் நினைத்தது நிறைவேறும்' என்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்