தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி 2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன விழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜையும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகா அபிஷேகம்
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் கோவில் பந்தலில் சாமிக்கு 2 டன் மா, பலா, வாழை, பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு திருஆபரண அலங்கார காட்சியுடன் அம்மையப்பன் திருவீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனி திருமஞ்சன விழா குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து இருந்தனர்.