மானாமதுரைஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வருகிற 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 3ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

Update: 2023-04-25 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 3ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

கொடியேற்றம் தொடக்கம்

மானாமதுரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக

கொடிமரம் அருகே திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் கொடிமரத்தில் அர்ச்சகர்கள் ராஜேஷ், குமார், பரத்வாஜ் ஆகியோர் கொடியேற்றி சிறப்பு தீபாராதனை காண்பித்தனர். விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி மற்றும் அம்பாள் மண்டகபடி மண்டபத்தில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற மே மாதம் 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும், மறுநாள் 3-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும் 4-ந்தேதியில் வைகையாற்றில் எதிர்சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 5-ந்தேதி குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி வைகையாற்றில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள் சண்முகபிரியா, இந்துமதி மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்