இந்து-முஸ்லிம்கள் இணைந்து நடத்திய மதநல்லிணக்க பூக்குழி திருவிழா

எஸ்.புதூர் அருகே இந்து, முஸ்லிம்கள் இணைந்து நடத்திய மதநல்லிணக்க பூக்குழி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-10 17:26 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே இந்து, முஸ்லிம்கள் இணைந்து நடத்திய மதநல்லிணக்க பூக்குழி திருவிழா நடைபெற்றது.

முகரம் பண்டிகை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே வாராப்பூர் கிராமத்தில் அஸ்ஸனா, உஸ்ஸனா, பாத்திமா நாச்சியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பூக்குழி திருவிழா, சப்பர பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முகரம் பண்டிகை திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் இந்துக்கள், முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் விரதம் மேற்கொண்டனர். தினமும் இரவில் பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் திருவிழா  அதிகாலை நடைபெற்றது.

மதநல்லிணக்க பூக்குழி

விரதமிருந்த ஆண்கள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மதநல்லிணக்க பூக்குழியில் மூன்று முறை இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெண்கள் பூ மொழுகுதல் எனும் நிகழ்ச்சியில் தலையில் கனமான துணியை போர்த்தியபடி, நெருப்பு கங்குகளை தலையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வீதி உலா

அதை தொடர்ந்து மின்னொளி அலங்கார சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அஸ்ஸனா, உஸ்ஸனா, பாத்திமா நாச்சியாரின் உருவங்கள் வைக்கப்பட்டு, வாணவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்