சம்பா பருவ நெல் சாகுபடிக்கு உரம் ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு உரங்கள் போதுமான அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

Update: 2022-09-21 18:41 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு உரங்கள் போதுமான அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

உரம்

ராமநாதபுரத்தில் உள்ள வேளாண்மைத்துறை உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விதைப்பு பணி தொடங்கி உள்ளது. இதுவரை 312 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையினை கொண்டு இதுவரை 31,036 எக்டர் வரை பயிர் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கு 4,695 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் கிரிப்கோ யூரியா 1,500 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 403 டன் கிரிப்கோ யூரியா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1579 டன் யூரியா, 1729 டன் டி.ஏ.பி., 118 டன் பொட்டாஷ், 2,570 டன் காம்ப்ளஸ், 50 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன.

பதிவு செய்யலாம்

ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ரூ.105.90 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கொள்முதல் நிலையத்தை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கொப்பரை கொள்முதல்

இதுதொடர்பான விவரங்களுக்கு விற்பனைக்குழு செயலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, உதவி இயக்குனர் நாகராஜன், ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்