பென்னாகரம் வட்டாரத்தில் விதியை மீறி செயல்பட்ட கடையில் உரங்கள் விற்க தடை-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

Update: 2022-10-07 18:45 GMT

தர்மபுரி,:

பென்னாகரம் வட்டாரத்தில் உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை மீறி செயல்பட்ட கடையில் உரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம் தெரிவித்துள்ளார்.

உரக்கடைகளில் ஆய்வு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உரம் விற்பனை செய்யப்படும் கடைகளில் உரிய விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது அனுமதி பெறாத உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, அரசு நிர்ணயித்த விலைக்கு கூடுதலாக உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, உரங்கள் இருப்பு மற்றும் விலை விபரங்கள் விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்கப்படுகிறதா? என்பன குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதேபோல் விற்பனை முனைய கருவி இருப்பு, பதிவேடு இருப்பு மற்றும் கிடங்கு உர இருப்பு விபரங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

விற்பனைக்கு தடை

உரங்கள் முறையாக ரசீது வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டது. அப்போது ஒரு உரக்கடையில் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ஐ மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த கடையில் உரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் யூரியா 1,830 டன், டி.ஏ.பி. 1,823 டன், பொட்டாஷ் 690 டன், காம்ப்ளக்ஸ் 3,927 டன், சூப்பர் பாஸ்பேட் 322 டன் என மொத்தம் 8,595 டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு மானியத்தில் வழங்கும் உரங்களை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசு சட்ட விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்