பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கிருஷ்ணகோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 65). இவர், தனது சகோதரர் மாசிலாமணியிடம் இருந்து தான செட்டில்மெண்ட் அடிப்படையில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார்.
இதற்காக பட்டா மாறுதல் கோரி மதியழகன் பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம்(42) விண்ணப்பித்தார். அப்போது பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா, தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன் இது குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தாா்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி மதியழகன் நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.6 ஆயிரத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கினார்.
அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சுதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.