பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சினை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கம்மநல்லூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 56). இவர் தனியார் பள்ளியின் டிரைவராக பணியாற்று வருகிறார். இவரது மனைவி மாரியாயி (48). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்டபாணி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளார். இதனால் மாரியாயி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து தண்டபாணி வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீடு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
தற்கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த தண்டபாணி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாரியாயி சேலையால் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தண்டபாணி மாரியாயியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரியாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து தண்டபாணி கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.