நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

கைதியிடம் பணத்தை திருப்பி கொடுக்காததால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-06-05 18:45 GMT

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக சுகன்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு வந்தார்.

சிறிது நேரத்தில் சுகன்யா, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்றது ஏன்?

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான தகவல் விவரம் வருமாறு:-

நெல்லிக்குப்பம் மோரை எவரெட்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 24). ஆட்டோ டிரைவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் முன்விரோத தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக முருகன், அவரது மனைவி ஆர்த்தி உள்பட 4 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த முருகன், கடந்த மாதம் 27-ந்தேதி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றார். அப்போது முருகன், தன்னை கைது செய்யும் போது கொடுத்த பணம், மோதிரத்தை திருப்பி தருமாறு அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இது சம்பந்தமாக எங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது மனைவியுடன் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கடலூர் சாலையில் படுத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டார்.

பணம், மோதிரம் தரவில்லை

மேலும் இது சம்பந்தமாக ஆர்த்தி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து புகார் கொடுத்தார். அதில், கஞ்சா போதையில் குத்தாட்டம் போட்டவர்களை தட்டிக்கேட்ட எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இது பற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் போதையில் குத்தாட்டம் போட்டவர்கள் கொடுத்த புகாரை பெற்று எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யும் போது எனது கணவரிடம் இருந்து 5 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் மோதிரத்தை வாங்கினர். ஆனால் இதுவரை அதை திருப்பி தரவில்லை. இது பற்றி கேட்ட எங்களை போலீசார் தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

பணியிட மாற்றம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 31-ந் தேதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் வந்த நாளில் இருந்து சுகன்யா சோகமுடன் காணப்பட்டார்.

இதனால் மனமுடைந்த சுகன்யா, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்