மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட பெண் ஊழியர் பலி
முக்கூடல் அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட ஊழியர் பரிதாபமாக பலியானார்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை மெயின் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜனலி (வயது 44). இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ஜனலி நேற்று காலையில் வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் போட்டு பைப்பை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜனலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜனலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.