புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காசநோயால் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பனையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகனின் மனைவி அம்சவள்ளி (வயது 52). இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக கடந்த 17-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட இந்த அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 3-வது தளத்தில் 303-வது வார்டில் அவர் சிகிச்சை பெற்றார். அம்சவள்ளியின் மகன் படிகாசு உடன் இருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வார்டில் படுக்கையில் நேற்று அதிகாலையில் அம்சவள்ளியை திடீரென காணவில்லை. இதனால் அவரது மகன் படிகாசு வார்டு வளாகத்தில் தேடிப்பார்த்தார். அப்போது அங்கு உள்ள கழிவறையில் அம்சவள்ளி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதனைக்கண்ட அவர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காசநோயால் அவதிப்பட்ட அம்சவள்ளி தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்த அம்சவள்ளியின் கணவர் முருகன் ஏற்கனவே இறந்து விட்டார். அம்சவள்ளிக்கு வனிதா (32) என்ற மகளும், படிகாசு (29), ரவிக்குமார் (27) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ரவிக்குமாருக்கு மட்டும் திருமணமாகாத நிலையில் மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது.
உடல் நிலை சரியில்லாமல் இருந்த அம்சவள்ளி தற்கொலை செய்தது அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் நோயாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த வார்டு மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.