மதுபோதையில் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த நிதி நிறுவன பெண் அதிகாரி

சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அந்த பெண்ணின் வாயில் போதையை கண்டுபிடிக்கும் 'பிரித்திங் அனலைசர்' கருவியை வைத்து ஊத சொன்னார்.;

Update:2022-12-06 00:57 IST

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ்காரர்கள் ராம்மூர்த்தி, நந்தகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மதுபோதையில் யாரேனும் வாகனங்களை ஓட்டி வருகிறார்களா? என்பதை 'பிரித்திங் அனலைசர்' கருவி மூலம் பரிசோதித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தினர். அப்போது அந்த காரை ஓட்டிய பெண்ணும், அவருடைய நண்பரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

போலீஸ்காரரை அறைந்தார்

உடனே சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அந்த பெண்ணின் வாயில் போதையை கண்டுபிடிக்கும் 'பிரித்திங் அனலைசர்' கருவியை வைத்து ஊத சொன்னார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் திடீரென்று போலீஸ்காரர் ராமமூர்த்தியின் கன்னத்தில் அறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் அங்கு வந்த திருநங்கைகள் சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண்ணும், அவருடைய ஆண் நண்பரும் அங்கிருந்து காரை எடுத்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

நிதி நிறுவன அதிகாரி

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தப்பி சென்ற கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரை தாக்கிய பெண் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் ஷெரின் பானு (48) என்பதும், அவருடன் காரில் வந்தது மும்பையை சேர்ந்த விமான நிலைய ஊழியரான விக்னேஷ் (30) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்