பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் கோர்ட்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், ஐகோர்ட்டுக்கு இதன் விவரத்தை தெரிவித்து மாற்று ஏற்பாடு செய்யவும் விழுப்புரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-31 18:51 GMT

விழுப்புரம்,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. தற்போது இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவேற்ற பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி கேட்டுள்ளார்.

அப்போது அந்த ஆவணங்கள் வேறு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக கோர்ட்டு ஊழியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அந்த ஆவணங்களை தேடி கண்டுபிடிக்குமாறு ஊழியர்களுக்கும், அந்த ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீசு

இதையடுத்து மாயமான ஆவணங்களை தேடும் பணியில் கோர்ட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்ட ஆவணங்களில் 4 ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில ஆவணங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சூழலில் கடந்த 29-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாயமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா? என நீதிபதி புஷ்பராணி கேள்வி எழுப்பியதற்கு இதுவரை ஆவணங்கள் கிடைக்கவில்லை, தேடிக்கொண்டிருப்பதாக கோர்ட்டு ஊழியர்கள் பதில் அளித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி புஷ்பராணி, முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாகவும், கவனக்குறைவாக செயல்பட்டதற்காகவும் கோர்ட்டு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கோர்ட்டு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாற்று ஏற்பாடு

மேலும் ஆவணங்கள் மாயமானது தொடர்பான தகவலை சென்னை ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கும்படியும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு தரப்பு வக்கீல்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வக்கீல்களுக்கும் அறிவிப்பு கொடுத்து மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை தாக்கல் செய்ய மாற்று ஏற்பாடு செய்யும்படியும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்