சென்னை மண்ணடியில் பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியான பெண் என்ஜினீயரை கழுத்தை அறுத்து கொைல செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-09 21:57 GMT

பெரம்பூர்,

சென்னை மண்ணடி பி.வி.ஐயர் தெருவில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால் (வயது 45). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா பாட்னா (39). என்ஜினீயரான இவர், போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் சென்னை வந்து மண்ணடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது.

நடத்தையில் சந்தேகம்

பிரியங்கா பாட்னா, தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் ெசல்போனில் வெகு நேரம் பேசி வந்துள்ளார். இதனால் ஆசிப் இக்பாலுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபருடன் பழகுவதையும், செல்போனில் வெகுநேரம் பேசுவதையும் கண்டித்தார்.

ஆனாலும் பிரியங்கா பாட்னா, அந்த நபருடனான நட்பை தொடர்ந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கழுத்தை அறுத்துக்கொலை

நேற்று மதியம் இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிரியங்கா பாட்னா, கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக சென்று தங்குவதாக கூறி துணிகளை எடுத்துக்கொண்டு இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் இக்பால், வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தனது காதல் மனைவி பிரியங்கா பாட்னாவின் கழுத்தை அறுத்தார். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை தட்டினர். ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் பிரியங்கா பாட்னா பரிதாபமாக இறந்தார்.

கணவர் கைது

வீட்டுக்குள் இருந்து ஆசிப் இக்பால், ஆடை முழுவதும் ரத்தக்கறையுடன் வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலையான பிரியங்கா பாட்னா உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிப் இக்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்