சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி பெண் என்ஜினீயர் பலி - மேலும் 3 பேர் காயம்

சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2022-12-26 13:59 IST

தென்காசியை அடுத்த இலஞ்சியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 26). என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் தனியாக தங்கி இருந்தார்.

இவர், தன்னுடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் என்ஜினீயர்களான ரகுராம் (25), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் (28), அஸ்வின் (29) ஆகியோருடன் காரில் கோவளம் சென்றார். காரை அஸ்வின் ஓட்டினார்.

கோவளம் சென்றுவிட்டு அதிகாலை நேரத்தில் அவர்கள் பள்ளிக்கரணை நோக்கி காரில் வந்தனர். பொன்மார் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த பெண் என்ஜினீயர் காயத்ரி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயங்களுடன் இருந்த 4 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்