அமைதியான சமூகம் நிலைக்க பெண் கல்வி மிக முக்கியம்

அமைதியான சமூகம் நிலைக்க பெண் கல்வி மிக முக்கியம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

Update: 2023-02-08 18:05 GMT

புதுமைப்பெண் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளுவர் மாவட்டம், பட்டாபிராமில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 643 மாணவிகளுக்கு உதவித்தொகையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெண் கல்வி முக்கியம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் முதல் கட்டமாக 916 மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவிகள் மற்றும் முதல் கட்டத்தில் விடுபட்ட மாணவிகளுக்கும் இத்திட்டப்பயனை வழங்குவதற்கு ஏதுவாக ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 643 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. கல்வி கற்கின்ற நேரத்தில் ஒரு புத்தகம் வாங்குவதாக இருந்தாலும், பேனா வாங்குவதாக இருந்தாலும் பணம் தேவைப்படும். அந்த பணத்தை யாரிடமும் கைகட்டி பெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஒரு தந்தையாக நின்று,உங்களது உரிமையானதை நான் தருகிறேன் என்ற எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார்.

சமுதாயத்திற்கு...

திருப்பத்தூர் மாவட்ட கல்வி சதவீதத்தை உயர்த்திட வேண்டும். கல்வி கற்பதன் மூலம் குழந்தை திருமணம் தடுக்கப்படுகின்றன. மகப்பேறு காலங்களில் தாய் மற்றும் குழந்தை இறப்பதை தடுக்க முடியும். ஒரு அமைதியான சமூகம் நிலைக்க வேண்டும் என்றால் பெண் கல்வி மிக மிக முக்கியம். ஒரு ஆண் கல்வி கற்றால் அந்த குடும்பத்திற்கு மட்டும்தான் வசதி வாய்ப்புகளை பெற்று தரும், ஆனால் ஒரு பெண் கல்விக்கற்றால் குடும்பத்தினருக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் வாய்ப்புகளை பெற்றுத் தரும்

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், நகர மன்ற தலைவர் சங்கீதா, ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி, சங்கீதா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்