பார்வையாளர்களை அசத்திய பெண் வர்ணனையாளர்கள்: சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் - அனைத்து மாடுகளுக்கும் தங்கக்காசு பரிசு

மதுரை சத்திரப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. கியூ ஆர் கோடு பயன்பாட்டில் மாடுகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2023-04-30 19:39 GMT


மதுரை சத்திரப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. கியூ ஆர் கோடு பயன்பாட்டில் மாடுகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.

சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. சார்பில் எம்.சத்திரப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முன்னதாக இந்த ஜல்லிக்கட்டுக்காக அங்குள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நேற்று காலை 7 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சிவசங்கர், மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் முன்னிலை வகித்தார். வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

1,200 காளைகள்

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை கிழக்கு சட்டமன்றத்தொகுதியைச் சேர்ந்த 1,200 காளைகள் தேர்வாகி இருந்தன. அதேபோல 776 வீரர்கள் மாடுகளை பிடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு சுற்றிலும் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

ஒவ்வொரு காளையும் வாடிவாசலில் ஆக்ரோஷத்துடன் வெளியே வந்து, வீரர்களிடம் போக்குகாட்டி தப்பின. சில காளைகள் வீரர்களின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கின. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

கியூ ஆர் கோடு

சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த காளை உரிமையாளர்களின் விண்ணப்பங்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்புதான் இறுதி செய்யப்பட்டன. பின்னர் கால்நடை மருத்துவ சான்றிதழ் மற்றும் டோக்கன்களில் கியூ ஆர் கோடு அச்சிடப்பட்டது. அதன்படி காளைகள், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன.

பெண் வர்ணனையாளர்கள்

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணனையாளர்களாக பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்னபாரதி, லாவண்யா ஆகிய பெண்கள் கலந்து கொண்டு பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதல் பரிசாக தலா ஒரு கார் அறிவிக்கப்பட்டது. இதேபோல காளைகளுக்கு புல்லட், அடுத்தடுத்த பரிசுகளாக மோட்டார் சைக்கிள்கள், டி.வி., சைக்கிள், தங்க நாணயங்கள், கட்டில், பீரோ என ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

முதல் பரிசு கார்

போட்டி முடிவில், சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைக்கு பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். அதன்படி 21 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலையைச் சேர்ந்த அஜய்குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடத்தை பிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் விஜய்க்கு புல்லட் பரிசு வழங்கப்பட்டது. 18 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திகேயனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

அதேபோல சிறந்த காளையாக தேர்வான சத்திரப்பட்டி தங்கப்பாண்டி-விஜயா ஆகியோரின் காளைக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. ஆண்டார்கொட்டாரம் உதயா காமேஷ் என்பவரின் காளைக்கு 2-ம் பரிசாக புல்லட் வழங்கப்பட்டது. யோககுரு உதயாவின் காளைக்கு 3-ம் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. குறிப்பாக சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 1,200 காளைகளுக்கும் தலா 1 கிராம் தங்கக்காசு சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு இருந்தன. இதன்காரணமாக மாடுபிடி வீரர்கள் சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்