ஓசூர் தனியார் வங்கி பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை

ஓசூர் அருகே ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதுடன், தனியார் வங்கி பெண் ஊழியரை கழுத்தை ெநரித்து கொலை செய்த, காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-28 18:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதுடன், தனியார் வங்கி பெண் ஊழியரை கழுத்தை நெரித்து கொலை செய்த, காதலனை போலீசார் கைது செய்தனர்.

வங்கி பெண் ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகை அருகே உள்ள நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரியங்கா (வயது 22). மாற்றுத்திறனாளி. இவர், கடந்த சில மாதங்களாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் (24) என்பவர் பிரியங்காவை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தையான வெங்கடசாமியை போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, உனது மகளை கடத்திவிட்டோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என மிரட்டியதாக தெரிகிறது. இதனிடையே நேற்று காலை பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காதலனிடம் விசாரணை

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக பிரியங்காவின் காதலன் ஸ்ரீதரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

பணம் கொடுக்க மறுத்ததால் கொலை

ஸ்ரீதர், காதலி பிரியங்காவை நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்று வரலாம் என கூறி ராமன்தொட்டி வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஸ்ரீதர் காதலியின் செல்போனை வாங்கி அவரது தந்தை வெங்கடசாமியை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் காதலியை கழுத்தை நெரித்து ஸ்ரீதர் கொலை செய்தது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர். தனியார் வங்கி பெண் ஊழியர் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து ஸ்ரீதரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதனிடையே பிரியங்கா கொலையில் மர்மம் உள்ளது என்றும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அனைவரையும் கைது செய்யக்கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரிகை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்