சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆா்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-01 19:12 GMT

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று மாலை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் பால்சாமி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள், ஊழியர்கள் வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ம், அகவிலைப்படியையும் வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்