மதுரையில் சிறுமியை கொன்று வாளியில் வைத்துவிட்டு தப்பிய தந்தை கைது-பிச்சைக்காரர் போல் சுற்றி திரிந்தபோது சிக்கினார்

மகளை கொலை செய்து விட்டு தலைமறைவாகி பிச்சைக்காரர் போல் சுற்றி திரிந்த டெய்லரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-06 19:59 GMT

மகளை கொலை செய்து விட்டு தலைமறைவாகி பிச்சைக்காரர் போல் சுற்றி திரிந்த டெய்லரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கொடூர கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் தன்ஷிகா(8), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மகளை அழைத்து கொண்டு காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார். எனவே பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சில நாட்களுக்கு பிறகு அவரும் மேலூரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டினர் பிரியதர்ஷினிக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பரணில் இருந்த ஒரு சாக்கு மூடையில் இருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது. அந்த மூடையை பிரித்து பார்த்த போது அதனுள் பிளாஸ்டிக் வாளியில் அழுகிய நிலையில் மகள் தன்ஷிகா பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று போலீசாரிடம் பிரியதர்ஷினி கூறினார்.

தலைமறைவான தந்தை

போலீசார் விசாரணையில், காளிமுத்து தான் மகளை கழுத்தை நெரித்து கொன்று, உடலை வாளிக்குள் வைத்து சாக்கு மூடையில் கட்டி வீட்டு பரணில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

பெற்ற மகளை கொடூரமாக கொன்ற காளிமுத்துவை பிடிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் ஆகியோர் உத்தரவின்பேரில் தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சங்கீதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் காளிமுத்துவை சிவகங்கை, மதுரை என பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பிச்சைக்காரர் போன்று தெருவில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் மதுக்கடை அருகே படுத்திருந்த காளிமுத்துவை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்