மதுரையில் வீட்டில் துப்பாக்கி, கஞ்சா பதுக்கிய தந்தை-மகன் கைது

மதுரையில் வீட்டில் கஞ்சா, துப்பாக்கி பதுக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-16 19:12 GMT


மதுரையில் வீட்டில் கஞ்சா, துப்பாக்கி பதுக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

ரோந்து பணி

மதுரையில் கஞ்சாவிற்பனையை தடுக்கும்விதமாக மாநகர் மற்றும் புறநகர் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்தநிலையில், பழங்காநத்தம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் பழங்காநத்தம், நேதாஜி மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தந்தை-மகன் கைது

மேலும், சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயசூரியபிரகாஷ் (வயது 25) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் துப்பாக்கி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஜெயசூரியபிரகாசையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சரவணனையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறிய சிறிய பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்