மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமனார்
செங்கோட்டை அருகே நடத்தை சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே நடத்தை சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
2-வது திருமணம்
தென்காசி மாவட்டம் ெசங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் இசக்கிராஜ் (வயது 35). இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவரது முதல் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (30) என்பவரை இசக்கிராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பத்மாவதி நடத்தை சந்தேகம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை பலமுறை பத்மாவதியின் மாமனார் முருகேசன் கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
கழுத்தை நெரித்துக் கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் பத்மாவதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அங்கு முருகேசன் வந்தார். 2 பேரும் பேசிக் கொண்டு இருக்கும்போது, மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன், பத்மாவதியின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
மாமனார் கைது
இதுகுறித்து உடனடியாக புளியரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தப்பி ஓடிய முருகேசனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை அருகே நடத்தை சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்து மாமனாரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.