தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி தந்தை-மகள் பலி சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம்

தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது, தடுப்பு கம்பியில் கார் மோதி தந்தை-மகள் பலியாகினர். மேலும் சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-17 21:39 GMT

வாழப்பாடி,

டயர் ரீ-டிரேடிங் தொழில்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 62). இவர் அங்கு டயர் ரீ-டிரேடிங் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பத்மாவதி (58). இந்த தம்பதியின் மகள் மகாலட்சுமி (37), மருமகன் குங்குமராஜ் (42). இவர்களின் மகள்கள் சமிட்ஷா (11), அனல்யா (9). இந்தநிலையில் நெய்வேலியில் வசித்து வந்த பார்த்திபனின் தாய் திடீரென மரணமடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பார்த்திபன், மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்திகளுடன் நெய்வேலிக்கு காரில் புறப்பட்டார். காரை மருமகன் குங்குமராஜ் ஓட்டினார்.

தடுப்பு கம்பியில் கார் மோதியது

இந்த கார் நேற்று காலை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகர் துணைமின் நிலையம் அருகே சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி, சாலையின் இடதுபுறம் இருந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பார்த்திபன் உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Father-daughter killed as car collides with roadside barricade

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பார்த்திபன், அவருடைய மகள் மகாலட்சுமி ஆகியோர் இறந்து விட்டதாக கூறினர். படுகாயம் அடைந்த பத்மாவதி, குங்குமராஜா, சிறுமிகள் சமிட்ஷா, அனல்யா ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இவர்கள் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் விபத்தில் பலியான பார்த்திபன், மகாலட்சுமி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறுதி சடங்குக்கு சென்றபோது தடுப்பு கம்பியில் கார் மோதி தந்தை மற்றும் மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்