குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை கைது
திருப்பத்தூர் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30) டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அக்ஷரா (5), இலக்கியா (31/2), மித்ரா என்கிற வேண்டாமணி (14 மாத கைக்குழந்தை) என 3 பெண் குழந்தைகள்உண்டு.
குடும்பத் தகராறு காரணமாக சத்யா, தனது முதல் மகள் அக்ஷராவுடன், தனது தாய் வீடு உள்ள ஜல்லியூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார். சிவகுமார் 2 குழந்தைகளை கவனிப்பத்தில் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 14 மாத குழந்தை முத்ரா பாலுக்கு அழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் இரண்டாவது குழந்தை இலக்கியாவிற்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்துள்ளார்.
இவர்கள் 3 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் 14 மாத கைக்குழந்தை மித்ரா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. சிவகுமார் மற்றும் அவரது இரண்டாவது குழந்தை இலக்கியா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கந்திலி போலீசில் சிவகுமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த சிவக்குமாரை கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.