தீக்குளிக்க முயன்ற தந்தை, மகள் கைது
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தை, மகள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் சித்ராதேவி (வயது 26). நுண்ணுயிரியல் பட்டதாரியான இவருக்கும் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 7 பவுன் நகையும், ரூ.1லட்சம் சீர்வரிசையும் கொடுக்கப்பட்டுள்ளது. ரமேஷ் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் சித்ராதேவி தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 10 மாத காலமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே சித்ராதேவி கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்மனு கொடுத்துள்ளார். அப்போது ரமேஷ் தனக்கு சித்ராதேவியுடன் வாழ விருப்பமில்லை என்றும் நகையும், வரதட்சணை பணத்தையும் திருப்பி கொடுக்க ஆறு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரமேஷ், சித்ராதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு சமூக வலைத்தளங்களில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்துவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று சித்ராதேவி, தனது தந்தை அழகர்சாமியுடன் கலெக்டர் அலுவலகம் வந்து தன்னை மிரட்டிவரும் ரமேஷ் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்தனர். இதனையடுத்து இருவரும் தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சூலக்கரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.