திருமணத்துக்காக பரிகார பூஜை செய்து விட்டு திரும்பியபோது விபத்து: மோட்டார் சைக்கிள் பாலத்தின் சுவரில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; ஹெல்மெட்டை கழற்றியதால் பரிதாபம்

திருமணத்துக்காக பரிகார பூஜை செய்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தபோது தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றியதால் பாலத்தின் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-05-16 20:52 GMT

அம்மாபேட்டை

திருமணத்துக்காக பரிகார பூஜை செய்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தபோது தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றியதால் பாலத்தின் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிகாரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா குட்டப்பட்டி அருகே உள்ள தண்ணீர்குட்டப்பட்டியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருடைய மகன் துரை (வயது 29). திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

இதையடுத்து துரைக்கு வரன் ேதடும் பணியில் பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால் துரைக்கு திருமணம் செய்ய ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஒரு ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நேற்று பவானி கூடுதுறைக்கு வந்து பரிகாரம் செய்துவிட்டு சேலத்துக்கு மோட்டார்சைக்கிளில் துரை திரும்பி சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பின்னால் உறவினர் வைத்தியநாதன் (31) உட்கார்ந்திருந்தார்.

சாவு

பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை மீன் பண்ணை அருகே சென்றபோது துரை தன் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்ற முயன்றார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிலை தடுமாறி ரோட்டோர இருந்த பாலத்தின் சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து துரை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். வைத்தியநாதன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று துரையை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் துரை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்