ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதியது; விபத்தில் கணவன்-மனைவி சாவு- துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது பரிதாபம்
ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதிய விபத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.;
ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதிய விபத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
வன ஊழியர்
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 8-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 75). ஓய்வுபெற்ற வன ஊழியர். இவருடைய மனைவி பாப்பாத்தி (65). இவர்கள் 2 பேரும் நாதகவுண்டன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மொபட்டில் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டனர். மொபட்டை சுப்பிரமணி ஓட்டி சென்றார். பாப்பாத்தி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
அவர்கள் செட்டிபாளையம்பிரிவு பூந்துறைரோட்டில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கிரேன், சுப்பிரமணி ஓட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மொபட்டுடன் கீழே விழுந்த சுப்பிரமணியும், பாப்பாத்தியும் கிரேனுக்குள் சிக்கி கொண்டார்கள். அப்போது அவர்கள் 2 பேர் மீதும் கிரேனின் சக்கரம் ஏறி இறங்கியது.
சாவு
இந்த விபத்தில் சுப்பிரமணியும், பாப்பாத்தியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து இறந்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். அதன்பிறகு கிரேனுக்கு அடியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சுப்பிரமணி-பாப்பாத்தி தம்பதியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் கிரேன் மோதி மொபட்டில் சென்ற தம்பதி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.