கொடுமுடி அருகே ஸ்கூட்டர் மீது லாரி ேமாதல்; பெண் சாவு- கணவர் கண் முன்னே பரிதாபம்
கொடுமுடி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் கண் முன்னே இந்த சம்பவம் நடந்தது.
கொடுமுடி
கொடுமுடி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் கண் முன்னே இந்த சம்பவம் நடந்தது.
விபத்து
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. அவருடைய மனைவி கண்ணம்மாள் (55). இவர்கள் 2 பேரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெள்ளோட்டம்பரப்பில் இருந்து கரூரில் உள்ள தனது மகள் வீட்டு்க்கு சென்று கொண்டிருந்தனர்.
கொடுமுடியை அடுத்த வெங்கமேடு என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்த பெரியசாமியும், கண்ணம்மாளும் கீழே விழுந்தனர்.
பெண் சாவு
இந்த விபத்தில் பெரியசாமி காயம் அடைந்தார். கண்ணம்மாள் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் கணவர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கண்ணம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பெரியசாமி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.