நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கீரமங்கலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-10 18:36 GMT

நீர்நிலை ஆக்கிரமிப்பு

கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேந்தன்குடி, நகரம், செரியலூர், பனங்குளம் உள்பட பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக பெரியாத்தாள் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் தண்ணீர் நிறைந்தால் சுற்றியுள்ள கிராமங்களின் நீர்மட்டம் உயரும் என்று கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளாக இந்த ஊரணியில் தண்ணீர் நிரம்பாததால் நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழே போய்விட்டது.

இதையடுத்து, கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் நீரின்றி அமையாது உலகு என்ற அமைப்பை உருவாக்கி பெரியாத்தாள் ஊரணி மற்றும் தண்ணீர் வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

கால்வாய் சீரமைப்பு

இதனைத்தொடர்ந்து பெரியாத்தாள் ஊரணி ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் போலீசார் பாதுகாப்போடு அகற்றினார்கள். இந்த நிலையில் பெரியாத்தாள் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் கொத்தமங்கலம் அணைக்கட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள அன்னதானக்காவேரி கால்வாயை பொதுமக்களின் பங்களிப்போடு பொக்லைன் எந்திரங்களை கொண்டு தூர்வாரி மராமத்து செய்தனர். அமைச்சர் மெய்யநாதன் சொந்த செலவில் 2 கி.மீ. கால்வாயை சீரமைத்து கொடுத்தார். அந்த காலக்கட்டத்தில் கனமழை பெய்து அம்புலி ஆற்றில் தண்ணீர் வந்த போது அன்னதானக்காவேரி கால்வாயிலும் தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் சேந்தன்குடி மற்றும் கொத்தமங்கலத்தில் கால்வாயின் தென்கரை பகுதியில் வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் கால்வாயில் தடுப்புகளை ஏற்படுத்தி சென்று வருகின்றனர். மேலும் தென்கரையில் நிரந்தரமாக சாலை வசதி அமைக்கவும் கோரிக்கை வைத்து அதிகாரிகளுக்கு மனுக்களும் கொடுத்துள்ளனர்.

தொடர் உண்ணாவிரதம்

தற்போது பருவமழை தொடங்கி மழை பெய்ய தொடங்கியுள்ளதால் கால்வாயில் உள்ள தற்காலிக தடுப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், 21 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்