தொழில்துறையினர் உண்ணாவிரதம்

‘பீக் ஹவர்’ மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி காரணம் பேட்டையில் தொழில்துறையினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-07 16:40 GMT

பல்லடம்

'பீக் ஹவர்' மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி காரணம் பேட்டையில் தொழில்துறையினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின்சார நிலை கட்டண உயர்வு மற்றும் 'பீக்ஹவர்' மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதம் குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த், கோபிபழனியப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் எல்.டி 111பி என்ற மின் இணைப்பை பெற்று தொழில் செய்து வருகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள். மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் எங்களிடம் இல்லை. இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10 மணி வரை 'பீக்ஹவர்' கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அரசின் கவனத்தை ஈர்க்க இந்தஉண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள 5 ஆயிரம் நிறுனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவன ஈர்ப்பு தீர்மானம்

இதற்கிடையே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., பேசும்போது " மின் கட்டண உயர்வால் தொழில் நடத்த முடியாத சூழலில் உள்ள தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்'' என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில், சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்