சின்னவடகம்பட்டியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

மயானம் அமைத்து தரக்கோரி சின்னவடகம்பட்டியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-03-15 20:15 GMT

ஓமலூர்

ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு மயானம் வசதி இல்லை. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சின்னவடகம்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் மயானம் அமைத்து தரக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, காடையாம்பட்டி மத்திய ஒன்றிய பா.ம.க. செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் மயானம் அமைக்க அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை 2 நாட்களில் அளவீடு செய்து கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்