இரட்டை கொலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி- தேவகோட்டையில் கடைகள் அடைப்பு-உண்ணாவிரதம்

தேவகோட்டை அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தேவகோட்டையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரதமும் நடைபெற்றது.

Update: 2023-02-07 18:45 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தேவகோட்டையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரதமும் நடைபெற்றது.

கடைகள் அடைப்பு- உண்ணாவிரதம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கனகம், இவருைடய மகள் வேலுமதி, இவருடைய மகன் மூவரசு (12). இவர்கள் கடந்த மாதம் 11-ந்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து தாய், மகள், சிறுவனை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் தாய் மற்றும் மகள் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் மூவரசு படுகாயத்துடன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போதுதான் வீடு திரும்பியுள்ளான்.

இந்த இரட்டை கொலை சம்பந்தமாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைத்து மாநிலம் முழுவதும் தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் சார்பில் நேற்று தேவகோட்டையில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கண்ணங்கோட்டை உள்ளிட்ட 14 நாட்டார்கள் தரப்பில் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.செந்தில்நாதன், உஞ்சனை நாடு ராமசாமி அம்பலம், செம்பொன்மாரிநாடு ராமசாமி அம்பலம், இறகுசேரி நாடு ரகுநாதன்அம்பலம், தென்னிலைநாடு செந்தில்நாதன் அம்பலம், கணேசன் அம்பலம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், யூனியன் தலைவர் பிர்லாகணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் கார்த்திக்மெய்யப்பன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, த.மா.கா மாநில செயலாளர் துரைகருணாநிதி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மேப்பல் சக்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் வர்த்தக சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தை முன்னிட்டு சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம் மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கண்கலங்கிய பெண்கள்

இந்த இரட்டைக்கொலையில் கொள்ளையர்களின் கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வந்த சிறுவன் மூவரசை அவரது உறவினர்கள் தேவகோட்டையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி சிறுவனிடம் நலம் விசாரித்தார். மேலும் கொள்ளையர்கள் தாக்கியதில் அந்த சிறுவனின் தலை பகுதியில் ஏற்பட்ட தழும்பை பார்த்து உண்ணாவிரதத்தில் கலந்தகொண்ட பெண்கள் கண்கலங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்