வேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ'- அச்சப்பட வேண்டாம் என டாக்டர் விளக்கம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது. இதற்கு அச்சப்பட வேண்டாம் என்று டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. இதற்கு அச்சப்பட வேண்டாம் என்று டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
மெட்ராஸ் ஐ'
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு புதிய பிரச்சினையாக 'மெட்ராஸ் ஐ' (கண் நோய்) பரவி வருகிறது. அதனால் கண் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நெல்லையில் உள்ள கண் ஆஸ்பத்திரிகளில் பலரும் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். கண் நோய் பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை போட்டுள்ளனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அலுவலகங்களில் பலர் விடுமுறை எடுத்து உள்ளனர். பொது மக்களும் கண் நோய் பாதிப்பால் வீடுகளில் ஓய்வெடுக்கிறார்கள்.
டாக்டர் விளக்கம்
இதுகுறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-
'மெட்ராஸ் ஐ' பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும். தற்போது வைரஸ் தொற்றால் 'மெட்ராஸ் ஐ' பரவி வருகிறது. இது மழைக்காலம் முடிவடைந்து பனிப்பொழிவு ஏற்படும் காலத்தில் பரவும் நோய் ஆகும். நெல்லை மாவட்டத்தில் தற்போது இந்த வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதைக்கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடும். அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்தால் மற்றவர்களுக்கு பரவுதல் தடுக்கப்படும். குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். 'மெட்ராஸ் ஐ'தங்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அனைவரும் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். 'மெட்ராஸ் ஐ'க்கு சிகிச்சை பெற டாக்டரை மட்டுமே அணுக வேண்டும். நேரடியாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி தாங்களே சுய சிகிச்சை செய்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.