விளை பொருட்களை இணைய வழியில் கொள்முதல் செய்ய நடவடிக்கை- வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்
விளை பொருட்களை இணைய வழியில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி கூறினார்.
விளை பொருட்களை இணைய வழியில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி கூறினார்.
விழிப்புணர்வு முகாம்
கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய வேளாண் சந்தை திட்டம்
கும்பகோணம் வேளாண் விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைப்பொருட்களை இணைய வழியில் உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளின் விளைப்பொருட்கள் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், விளைப்பொருட்களுக்கு உரிய தொகையானது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மின்னணு பரிவர்த்தனை
மேலும், உரிமம் பெற்ற வணிகர்கள் மின்னணு பரிவர்த்தனை மூலம் அதிக இடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு வேளாண் விளைப்பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யலாம்.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இது வரை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 1,443 விவசாயிகளின் விவரங்கள் வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதிகள்
எனவே விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைந்துள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, தேசிய மின்னணு வேளாண் சந்தையின் மூலம் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.