ஆடி பட்டம் விதைக்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆடி பட்டம் விதைப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-07-22 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆடி பட்டம் விதைப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாய பணிகள்

நமது முன்னோர்கள் சொல்படி ஆடி மாதத்தில் தட்சணாயண காலம் தொடங்கும். இந்த மாதத்தில் சூரியனின் இயக்கம் மாறுகிறது. வடகிழக்கு, தென்கிழக்கு திசைகளை வைத்து இது குறிப்பிடப்படுகிறது. ஆடியில் தொடங்கும் தட்சணாயணத்தில் சூரிய கதிர்களில் பயிர்களுக்கு தேவையான சக்தி அதிகளவில் இருப்பதால் இதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழியை கடைப்பிடித்து ஆடி மாதம் தொடங்கியதும் தங்களது விளை நிலத்தில் விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம்.

இது வடமாநிலங்களில் காரீப்பருவம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடியில் காத்து அடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும் என்பதற்கேற்ப ஆடியில் விதை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம் என்ற சொலவடையும் உள்ளது. இதன்படி மாவட்டத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, மானாமதுரை, காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் தற்போது விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நல்ல விளைச்சல்

சில இடங்களில் காய்கறிகள், குறுகிய கால பயிர்கள், கடலை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடும் வகையிலும் விவசாய பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதுதவிர வீட்டு தோட்டங்களில் அவரை செடிகள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

இதுகுறித்து காரைக்குடி அருகே சாக்கவயலை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- ஆடி மாதம் என்பது பயிர்களுக்கு உகந்த மாதமாகவும், நல்ல காற்று வீசும் மாதமாகவும் உள்ளது. இந்த மாதத்தில் விளைநிலங்களை உழவு செய்து பக்குவப்படுத்தி பயிர்களை விதைப்பு செய்தால் ஐப்பசி மாதத்தில் நல்ல மழை பெய்து அந்த பயிர்கள் நல்ல விளைச்சலை கொடுக்கும். அதன் பின்னர் தை மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் இருப்பதால் விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறந்ததும் விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம். தற்போது விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்