பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி விவசாயிகள் பயிர் செய்யும் நெல்-சம்பா, நெல்-நவரை, உளுந்து, மக்காச்சோளம், மணிலா, பருத்தி, கரும்பு, நெல் நஞ்சை தரிசு- உளுந்து, பச்சைப்பயிறு, நெல் நஞ்சை தரிசு-பருத்தி ஆகிய பயிர்களை காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காப்பீடு
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2020-2021-ம் ஆண்டு 93 ஆயிரத்து 905 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இது தவிர மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். இவர்கள் தங்கள் பயிர்களை பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்தி பதிவு செய்தனர். நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.517 வீதம் செலுத்தி காப்பீடு செய்தனர்.
இதற்காக முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், ஆதார் அட்டைநகல், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் காப்பீடு செய்தனர்.
இதன்படி சம்பா பயிருக்கு 3 லட்சத்து 33 ஆயிரத்து 393 பதிவுகளில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 393 ஏக்கர் பயிருக்கு 758 வருவாய் கிராமங்களில் இருந்து விவசாயிகள் பதிவு செய்தனர். அதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 495 பதிவுகளுக்கு ரூ.35 கோடியே 9 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
ரூ.39 கோடி இழப்பீடு
இதுதவிர மக்காச்சோளம், பருத்தி பயிர்களில் 74 ஆயிரத்து 101 பதிவுகள் மூலம் 47 ஆயிரத்து 93 ஏக்கர் பதிவு செய்யப்பட்டதில் 40 ஆயிரத்து 882 பதிவுகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 377 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.39 கோடியே 12 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக நல்லூர் ஒன்றிய பகுதியில் 48 ஆயிரத்து 207 பதிவுகளுக்கு 7 கோடியே 22 லட்சத்து 242 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக பண்ருட்டி ஒன்றியத்தில் 637 பதிவுகளுக்கு ரூ.51 லட்சத்து 99 ஆயிரத்து 842 இழப்பீடு கிடைத்துள்ளது. இந்த தொகையை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
ஆனால் பல்வேறு கிராமங்களிலும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது பற்றி அவர்கள் சமீபத்தில் நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் பயிர் காப்பீடு செய்ததில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுபட்டுள்ளதாகவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குரல் மாவட்ட நிர்வாகத்தின் காதுகளில் விழவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். . இது பற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-
ஏற்புடையது அல்ல
பண்ருட்டி விவசாயி தேவநாதன்:-
13 ஒன்றியங்களிலும் பண்ருட்டி ஒன்றியத்தில் தான் 2 கிராமங்களுக்கு மட்டும் பயிர் காப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. அதாவது, அங்குசெட்டிப்பாளையம், திருவாமூர் ஆகிய 2 கிராமங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டது. அதை ஒட்டிய சிறுவத்தூர் கிராமத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை. இது பற்றி அதிகாரிகளிடம் காரணம் கேட்டால், கடந்த முறை அந்த கிராமத்துக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கி விட்டார்கள். இந்த ஆண்டு வேறு கிராமத்துக்கு வழங்குகிறோம் என்று ரேண்டம் முறையில் கூறுகிறார்கள். ஆகவே இந்த நடைமுறை ஏற்புடையது அல்ல. காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை மறியல் செய்வோம்
சிதம்பரம் விவசாயி சித்தார்த்தன்:-
குமராட்சி ஒன்றியத்தில் 57 கிராமங்கள் உள்ளன. வேளாண் மண்டலமாக பார்க்கும் போது, 80 கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், குமராட்சி பகுதி கடைமடை பகுதி ஆகும், ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் அறுவடைக்கு 45 நாட்களுக்கு முன்பு வயல்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. அதன்பிறகு தண்ணீர் வடிந்தாலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பூ வரும் நேரத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த பகுதியை இன்சூரன்ஸ் நிறுவனம் கணக்கில் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் சரியாக கணக்கெடுக்க வில்லை. தெற்கு மாங்குடி, வடக்குமாங்குடி ஆகிய 2 கிராமங்களிலும், ஒரு வரப்பு தான் மாறுகிறது. அதில் தெற்கு மாங்குடி விவசாயி களுக்கு இழப்பீடு கிடைத்துள்ளது. வடக்குமாங்குடிக்கு இல்லை. இதேபோல் 37 கிராமங்களுக்கு இன்சூரன்ஸ் வரவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி சாலை மறியல் செய்வோம்.
குளறுபடி
தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் மாதவன்:-
கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் சம்பா பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் காப்பீடு செய்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க வில்லை. 13 ஒன்றியங்களிலும் 280 கிராமங்கள் விடுப்பட்டுள்ளது. அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் குளறுபடி நடந்துள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் கடலூரில் ஒரு அலுவலகத்தை அமைத்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இணைந்து செயல்படுத்த வேண்டும்
கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன்:-
பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு மகசூல் அறுவடை பரிசோதனையின் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு வெள்ளம், மழை போன்ற காரணங்களால் ஆரம்ப கால கட்ட இழப்பீடு, மத்திய கால கட்ட இழப்பீடு என பாதிப்பு அடிப்படையில் இழப்பீடு வழங்கும் நிலையில், அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், வேளாண்மை துறை முழுமையாக அறுவடை மகசூல் மூலமே, இழப்பீடு நிர்ணயிப்பது ஏற்புடையது அல்ல. 5 ஆண்டு கால சராசரி மகசூலின் அளவோடு, நடப்பு ஆண்டு மகசூல் அளவை ஒப்பிடுவதை வெளிப்படை தன்மையோடு, செயல்படுத்த வேண்டும்.
மேலும் பயிர் காப்பீடு திட்டத்தில் ஆரம்ப கால கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத் தியது. அதன் அடிப்படையில் தான் இழப்பீடும் இணைந்து வழங்கியது.
தற்போது இந்த திட்டத்தில் இருந்து மத்திய அரசு தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டு மாநில அரசு 80 சதவீதமும், காப்பீடு நிறுவனம் 20 சதவீதமும் வழங்குவதற்கு விதிமுறையை மாற்றியதால், நிதி நிலைமையை கருத்தில் கொண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்வதற்கு அரசு முழுமையாக கவனம் செலுத்தவில்வை.
வருங்காலங்களில் மத்திய, மநில அரசுகள் இணைந்து பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு கிடைக்கும். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இன்றி இழப்பீடு வழங்க வேண்டும்.