சமாதான கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

பூம்புகார் அருகே மீன்பதப்படுத்தும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சமாதான கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-02-18 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அருகே மீன்பதப்படுத்தும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சமாதான கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மீன்பதப்படுத்தும் நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே பழையகரம் காவிரி ஆற்றின் கரையோரம் தனியார் மீன் பதப்படுத்தும் மற்றும் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து பழையகரம், வானகிரி, கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட 8 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று 8 கிராம விவசாயிகள் மற்றும் கிராம பிரதிநிதிகளை அழைத்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினார். அப்போது கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், 'பழையகரம் காவிரி ஆற்றில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்பணை அமைக்கப்பட்டதன் காரணமாக மேற்கண்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் தன்மை நீங்கி விட்டது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது.

கருத்து கேட்பு கூட்டம்

காவிரி ஆற்றங்கரை அருகே மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கிராம பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், நிறுவனம் அமைக்க சுற்றுச்சூழல் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பொதுமக்கள் இடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இந்த மீன் பதப்படுத்தும் நிலையத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்' என்றனர். இதனால் கூட்டத்தில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

வெளிநடப்பு

இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் கிராம பிரதிநிதிகள் ஆகியோர் மீன் பதப்படுத்தும் நிலையத்தை தடை செய்யக்கோரி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தில் தாசில்தார் செந்தில்குமார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மதியழகன், கிராம பொறுப்பாளர்கள் கணேசன், சிவனேசன், மதியழகன், பாண்டியன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்