விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட்டம்

ஆண்டிப்பட்டியில் கண்மாய்களுக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-13 19:00 GMT

முல்லைப்பெரியாறு தண்ணீர்

ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஏத்தக்கோவில், தெப்பம்பட்டி, பிச்சம்பட்டி, மறவபட்டி, கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 18 கண்மாய்களும், 150 சிறுகுளங்களும் வறண்ட நிலையிலேயே உள்ளது. போதுமான மழை பெய்தாலும் நீரை தேக்க வழிவகை செய்யாத காரணத்தால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி வறட்சியாகவே காணப்படுகிறது.

இதனைபோக்கும் வகையில் முல்லைப்பெரியாற்றிலிருந்து உபரி நீரை குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து கண்மாய்களில் நிரப்பி பாசன வசதி அளிக்க வேண்டும் என ஆண்டிப்பட்டி பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, ஆண்டிப்பட்டியில், ஒன்றிய பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு முல்லைப்பெரியாற்றிலிருந்து உபரிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் கனவு திட்டம்

இதற்கு ஆண்டிப்பட்டி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் தயாளன், பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்டிப்பட்டி பகுதியில் தொடரும் வறட்சியை போக்கும் வகையில் விவசாயிகளின் கனவுதிட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட குழு செயலாளர் கண்ணன், விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜப்பன், போடிதாசன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பிரபு மற்றும் பல்வேறு அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்