விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்-தர்ணா
மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலம்
மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், செந்தில்குமார், அகோரம், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார்.
முன்னதாக மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் இருந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு காந்திஜி ரோடு, பட்டமங்கலத் தெரு, சின்னக்கடைத் தெரு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.
ஆர்ப்பாட்டம்-தர்ணா
பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டரை சந்திக்க அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலெக்டர் வெளியே சென்றுள்ளார், அலுவலகத்தில் மனு அளிக்க 10 பேர் மட்டும் செல்ல அனுமதி என்று தெரிவித்தனர். இதனை ஏற்காத விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனை தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு
அப்போது கடந்த மாதம் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மழையால் பாதித்த விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
மயிலாடுதுறை என். பி.கே.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
பரபரப்பு
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் அரசின் கவனத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது