விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-07 18:45 GMT

திட்டச்சேரி:

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய துணைத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோதுமானதாக இல்லை. எனவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

பயிர்காப்பீட்டு தொகை

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையினை பாகுபாடின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும்,மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

வேதாரண்யம்

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு பயிர் காப்பீட்டு தொகையை பெற்று தரக்கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அரிவித்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை என கூறி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் அருள்மொழி இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாக குழு நாராயணன். ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயா,ரேணுகா கருணாநிதி ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகானந்தம் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து கோரிக்கை மனுவை வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலனிடம் வழங்கினர்.

அருந்தவம்புலம்

தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்