விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-25 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஞான பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லப்பன், மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாகையா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனே வழங்க வேண்டும். கடந்தாண்டு சீர்காழி வட்டாரத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவை தொகுப்பை பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மயிலாடுதுறை கிட்டப்பங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல் திருக்கடையூர் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் குணசுந்தரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிம்சன், ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்