கபிஸ்தலம்:
விவசாயிகளுக்கான மின் மானிய கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 1970-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் மாரியப்ப கவுண்டர், ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர் ஆகியோர் பலியாகினர். 52-ம் ஆண்டு நினைவு நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சுவாமிமலை அருகே உள்ள வளையப்பேட்டை மாங்குடியில் ஏராளமான விவசாயிகள், பலியானவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மத்திய அரசு 2020 மின் வாரிய திருத்த சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசிற்கு துணை போக கூடாது. விவசாயிகள் வேளாண் மின்மானிய போராட்டத்தில் 1970 முதல் 1984 வரை பங்கேற்று உயிர்நீத்த 63 விவசாயிகளை வேளாண் தியாகிகளாக அங்கீகரித்து அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட காவிரி பாசன சங்க விவசாயிகள் கலந்து கொண்டனர்.