கொப்பரை உற்பத்திக்கு மாறும் விவசாயிகள்
பழனி பகுதியில் தேங்காய் விலை சரிவால் கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கொப்பரை ஏல மையம்
பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு பறிக்கப்படும் தேங்காய்களை நேரடியாகவும், கொப்பரையாகவும் மாற்றி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். பழனியில் கொப்பரை விற்பனைக்கான கூட்டுறவு ஏல மையம் உள்ளது. இங்கு புதன்கிழமைதோறும் ஏலம் நடைபெறும். பழனி சுற்றுப்புற விவசாயிகள் இங்கு கொப்பரையை கொண்டு வருகின்றனர். இங்கு தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக தேங்காய் கிலோ ரூ.20-க்கும், கொப்பரை விலை ரூ.69-க்கும் விற்பனையானது. எனவே தென்னை விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். தற்போது கொப்பரை விலை சற்று உயர்ந்து வருகிறது. எனவே விவசாயிகள் கொப்பரை உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரத்து அதிகரிப்பு
இதுகுறித்து பழனி கூட்டுறவு ஏல மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த 2 மாதங்களாக தேங்காய், கொப்பரை விலை சரிந்து காணப்பட்டது. தற்போது கொப்பரை விலை உயர்ந்து வருகிறது. எனவே ஏல மையத்துக்கு கொப்பரை வரத்தும் அதிகரித்து உள்ளது. கடந்த வாரங்களில் 7 முதல் 8 டன் வரத்து ஆன நிலையில் நேற்று பழனி ஏல மையத்துக்கு சுமார் 9 டன் கொப்பரை வரத்தானது. கொப்பரை கிலோ ரூ.78 முதல் ரூ.80 வரை ஏலம் போனது. எனவே விவசாயிகள் தரமான கொப்பரை உற்பத்தி செய்தால் அதிக விலை பெறலாம் என்றனர்.
விவசாயிகள் கூறும்போது, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது கொப்பரை விலை உயர்ந்து வருவதால் தேங்காயை கொப்பரையாக மாற்றி விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.