கலெக்டர் முன்னிலையில் விவசாயிகள் திடீர் மோதல்

கலெக்டர் முன்னிலையில் விவசாயிகள் திடீர் மோதலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-30 20:21 GMT

குறை தீர்க்கும் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும், விவசாய சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மற்றும் சுற்றப்புற பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கங்களில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூட்டத்தில் இருந்து சங்க நிர்வாகிகளுடன் வெளியே சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது அங்கு வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வணிக வரித்துறை ஆணையர் தீரஜ்குமாரிடம் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். பின்னர் மீண்டும் கூட்டத்துக்கு வந்து பங்கேற்றனர். கூட்டத்தில் அய்யாக்கண்ணு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதால் அவர் பேச்சை முடித்துக்கொள்ள பெல் அடிக்கப்பட்டது.

விவசாயிகள் மோதல்

ஆனாலும் அவர் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெண் விவசாயி கவுசல்யா திடீரென குறுக்கிட்டு பேச்சை முடிக்க கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ததால் கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் கூட்ட அரங்கினுள் வந்து அவர்களை விலக்கிவிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யா கொடுத்த புகாரின்பேரில் அய்யாக்கண்ணு மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்