குறுவை சாகுபடி பணிகளை பூஜையுடன் தொடங்கிய விவசாயிகள்
நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளை பூஜையுடன் விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அவர்கள் மேட்டூர் அணையில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்;
நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளை பூஜையுடன் விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அவர்கள் மேட்டூர் அணையில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக முன்கூட்டியே அதுவும் மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
75 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி
மேட்டூர் அணை 20 நாட்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்டதால், நாகை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் சூடம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து குறுவை சாகுபடி பணிகளை நாகை மாவட்ட விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதற்கான முதல்கட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக தெற்கு பனையூர், வடக்கு பனையூர், விடங்களூர், சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததால், அப்பகுதி விவசாயிகள் சேற்றில் நேரடி நெல் விதைப்பை உற்சாகத்துடன் தொடங்கினர். நிலத்தை டிராக்டர் மூலம் உழுது, வயலில் மண்டி கிடக்கும் புற்களை அகற்றி களையெடுத்து ஆர்வத்துடன் நேரடி நெல் விதைகளை நிலத்தில் தெளித்து வருகின்றனர்.இந்த ஆண்டு முன்கூட்டியே குறுவை சாகுபடி தொடங்கிவிட்டதால் வரும் காலங்களில் பருவமழையில் இருந்து நெற்பயிர்கள் தப்பிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடுதல் தண்ணீா்
இதுகுறித்து நாகை மாவட்ட விவசாயிகள் கூறும்போது:-தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வெண்ணாறு, ஓடம்போக்கியாறு, அரிச்சந்திரா நதி ஆகிய வாய்க்கால்களில் தான் ஓடுகிறதே தவிர விளை நிலங்களுக்குள் வரவில்லை. தண்ணீர் குறைந்த அளவு திறந்து விடப்படுவதால் தான், நிலத்துக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.இதனால் பெரும்பாலான நிலங்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டும் காய்ந்து கிடக்கின்றன. எனவே மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால்தான் கடைமடை விவசாய நிலத்துக்குள் தண்ணீர் வரும். அப்போதுதான் மேற்கொண்டு சாகுபடி செய்ய முடியும். எனவே மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
குறுவை தொகுப்பு திட்டம்
குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவித்து, அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கிடைக்க நடவடிக்கை வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடனை முன்கூட்டியே வழங்கினால் தான் குறுவை சாகுபடியை தொய்வின்றி செய்ய வசதியாக இருக்கும். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களில் உரம் எளிதாக தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.