விவசாயிகள் மண்ணின் தரத்திற்கேற்ப பயிரிட வேண்டும்குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
விவசாயிகள் மண்ணின் தரத்திற்கேற்ப பயிரிட வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. அப்போது விவசாயிகளிடமிருந்து 80 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தானியங்களின் இருப்பு, விலை ஆகியவற்றின் விவரங்களை வைக்க வேண்டும். மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கடைகளில் யூரியா தட்டுப்பாடு உள்ளது. இதனை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-
மண்ணின் தரம்
நமது மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கசிவு நீர்குட்டைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் மண்ணின் தரத்தை ஆய்வு செய்து அதற்கேற்ற பயிர்களை விவசாயம் செய்து பயனடைய வேண்டும். மாவட்ட அளவிலான பசுமைக்குழு அனுமதி பெற்ற பிறகுதான் எந்தவொரு பகுதியிலும் மரங்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடினால் வனத்துறையினர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் எங்களின் விவசாய நிலத்தில் பயிர்களை காட்டுப்பன்றி, எலி ஆகியவை சேதப்படுத்துகிறது. இதனை தடுக்கக்கூடிய பொறுப்பு வனத்துறையினருக்கு உள்ளது. விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, எலிகளை தடுக்காத வனத்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, வேளாண் துணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வேளாண் வணிக துணை இயக்குனர் செல்வராஜி, கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி குணசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.