பாமாயில் மர சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்

மாத வருமானம் தரும் பாமாயில் மரசாகுபடிசெய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2023-10-11 18:45 GMT

காணொலி காட்சி வாகனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக தேசிய எண்ணெய்பனை இயக்க திட்டத்தின் மூலம் எண்ணெய்பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு காணொலி காட்சி வாகன பிரசாரம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமை தாங்கினார். தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

100 சதவீதம் மானியத்தில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எண்ணெய்பனை திட்டத்தின் மூலமாக பாமாயில் மரம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமாயில் சாகுபடி குறித்து விழிப்புணர்வு காணொலி காட்சி பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஒரு வாரத்துக்கு பிரசார பணியை மேற்கொள்ளவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022-2023-ம் ஆண்டு முதல் தோட்டக்கலை துறை மூலம் 30.5 ஹெக்டேர் பரப்பளவிலும், 2023-2024-ல் 20 ஹெக்டோ் பரப்பளவிலும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் நடவு செடிகள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.14 லட்சத்து 64 ஆயிரத்து 500 ஆகும். எண்ணெய்பனை செடிகள் நடவின்போது அதன் வேர்களை கொறித்துண்ணிகளிடம் இருந்து பாதுகாக்க வேர்களை சுற்றி அமைக்கப்படும் கம்பி வலைக்கு ஒரு ஹெக்டேருக்கு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

குறைந்த பட்ச ஆதரவு விலை

எண்ணெய்பனை சாகுபடியில் 3-ம் ஆண்டில் இருந்து மகசூல் வர தொடங்குகிறது. 3 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணெய்பனையில் ஊடுபயிராக பிற பயிர்களை சாகுபடி செய்யலாம். அவ்வாறு சாகுபடி செய்யப்படும் ஊடுபயிருக்கு தோட்டக்கலை துறை மூலமாக ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரத்து 500 வீதம் 4 ஆண்டுகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.

மத்திய அரசு எண்ணெய்பனைக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு டன்னுக்கு ரூ.13 ஆயிரத்து 346 என நிர்ணயம் செய்துள்ளது. விலை ஏற்ற, இறக்கத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. அறுவடைக்கு தயாரான எண்ணெய்பனை பழக்குலைகளை தனியார் நிறுவனம் மூலம் நேரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று கொள்முதல் செய்யப்படுகிறது.

நிலையான மாத வருமானம்

எண்ணெய்பனை ஒரு ஹெக்டேருக்கு 143 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒரு மரத்தில் வருடத்துக்கு 12 குலைகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு குலையின் சராசரி எடை 25 கிலோ. இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 42.9 டன்கள் பழங்களை அறுவடை செய்வதால் குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்து 46 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். இதன் மூலம் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் பெறமுடியும். எனவே விவசாயிகள் மாத வருமானம் தரும் பாமாயில் மர சாகுபடி செய்து பயன்பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் மீனா அருள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தோட்டக்கலை உதவி இயக்குனர் உமா, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், தனியார் நிறுவனத்தின் பாமாயில் விரிவாக்க மேலாளர் முத்து செல்வன் மற்றும் எண்ணெய்பனை சாகுபடி செய்து வரும் முன்னோடி விவாசயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்